Towards a just, equitable, humane and sustainable society

ஊர் செழித்தது


செயல்பாடுகள்:

  • மாணவர்கள் அவர்களுக்குத் தெரிந்த கதைகளை வகுப்பில் பகிர்ந்து கொள்ளுதல்
  • மாணவர்கள் சொந்தமாகக் கதையை உருவாக்குதல்
  • பட அட்டைகளை வைத்து மாணவர்கள் கதை கூறுதல்

முதல் நாள்:

இரண்டாம் பருவத்தில் வரும் ‘ஊர் செழித்தது’ என்ற பாடம் ஒரு பசுமையான கிராமத்தை வருணித்துக் கூறும் விதத்தில் அமைந்துள்ளது. இப்பாடத்தைத் தொடங்குவதற்கு முன் அறிமுகச் செயல்பாடுகளாக எங்கள் வகுப்பில் நிகழ்ந்தவற்றை இங்கே எழுதியுள்ளேன்.

முதலில் மாணவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்த சொன்னேன். அவர்கள் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார்கள் என ஒவ்வொருவரும் சொன்னார்கள். குறிப்பாக அனைவரும் தன் பெயரைக் குறிப்பிட்டு, தான் வீட்டிலிருந்து வருவதாகக் கூறினர். நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது, என் ஊர் பெயர் பாகூர் என்று கூறினேன். திரும்பவும் மாணவர்களிடம், “எங்கிருந்து வருகிறீர்கள்?” எனக் கேட்டேன்.  அவர்கள் மணமேடு என்ற ஊரிலிருந்து வருவதாகக் கூறினர்.

மாணவர்கள் அவர்களுக்குத் தெரிந்த கதைகளை வகுப்பில் பகிர்ந்து கொள்ளுதல்:

பின்னர், மாணவர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கதையைக் கூறச் சொன்னேன். முதலில் தெரியாது என்று கூறியவர்கள், பின்பு அவர்கள் பார்க்கும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னவுடன், ஒரு மாணவன் எழுந்து, மைட்டி ராஜு கதையைக் கூறுகிறேன் என்றான்.

மைட்டி ராஜூ கதை

“ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவனைப் போலிஸ் தேடிக் கொண்டிருந்தது. மைட்டி ராஜு திருடனைப் போலிஸிடம் பிடித்துக் கொடுத்தான்.”

அந்த மாணவன் கதை சொன்ன பின்பு, நான் நடுவில் அமர்ந்து, அனைவரையும் என்னைச் சுற்றி  வஜ்ராசனத்தில் அமர வைத்தேன்.  அவர்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஊரின் கதையைக் கூற ஆரம்பித்தேன். கதை கூறும்போது மாணவர்களை நான் செய்யும் சில செயல்களை என்னுடன் சேர்ந்து செய்யுமாறு கூறினேன். குறிப்பாகப் பறவைகள் பறப்பதற்கு, மண் அள்ளி போடுவதற்கு, “ஏலேலோ ஐலசா”  பாட்டுக்கு அசைவது போன்றவைகளைச் செய்தனர். இவ்வாறு செய்யும் போது அவர்களின் கவனம் முழுவதும் கதையின் மீது இருந்தது; கதை கேட்கும் ஆர்வம் அதிகரித்தது; மகிழ்ந்து இருந்தனர். பாடப்புத்தகத்தில் இருக்கும் கதையை ஒட்டி, அவர்கள் பக்கத்து ஊரில் நடந்த கதையைக் கூறும் போது, பாடத்தோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

மாணவர்கள் சொந்தமாகக் கதையை உருவாக்குதல்வ குப்பில் ஒரு சில மாணவர்கள் வார்த்தைகளை எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிரமப்படுகின்றனர்.  அவர்களை மனதில் கொண்டு, நான் சொன்ன கதையில் வரும் வார்த்தைகளை அவர்களுக்கு நேரடியாக எழுதி அறிமுகப்படுத்தாமல், அவர்களை வகுப்பறையைச் சுற்றி இருக்கும் இயற்கையில் இருந்து, குறிப்பாகச் சுற்றி இருக்கும் மரங்களைப் பார்த்து வரையச் சொன்னேன். இதில் எழுத படிக்க சிரமப்படும் மாணவன் ஒருவன், தனக்கு அங்கிருந்த செடிகள், மரங்களின் பெயரை  மிக எளிதாகக் கூறினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். மேலும் அவன் அதை வரைவதற்கு, அச்சு எடுப்பதற்கு மற்றவர்களை விட ஆர்வமாக இருந்தான். பின்பு அனைவரும் வகுப்பறைக்கு சென்று வரைந்த மரத்தின் பெயரை எழுதினர். எழுதப் படிக்க கஷ்டப்படும் குழந்தையைக் கரும்பலகையில் எழுதச் சொன்னேன். எழுதுவதற்குச் சிரமப்பட்டான். ஒரு முறை கூறி, உண்மைப் பொருளோடு சம்பந்தப்படுத்தி கூறிய பின்பு, ஒரளவுக்குப் படித்தான்.

மாணவர்களிடம் அவர்கள் ஊருக்கு ஏன் அவ்வாறு பெயர் சூட்டினார்கள் என்பதையும் ஊரில் உள்ள நீர் நிலைகளின் பெயர்களையும் கேட்டு வரச் சொன்னேன்.

நாள்-2

இரண்டாம் நாள் மாணவர்கள் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருந்தனர். நேற்று சில மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை என்பதால், நேற்று என்ன நடந்தது என்று ஒவ்வொருவராகக் கேட்டேன்.  முதலில் சற்று யோசித்தனர்; பின்பு நினைவுக்கு வந்து, வகுப்பில் நடந்ததை வரிசையாகக் கூறினர். சில  மாணவர்கள் நேற்று நான் கேட்ட கேள்விக்குப் பதிலோடு காத்திருந்தனர். அவை,

மோடு இருந்ததால் மணல்மேடு என்று கூறுகிறார்கள் .

பூக்கள் நிறைய பூப்பதால் புதுப்பேட்டை என்று கூறுகிறார்கள்.

ஊரில் இருக்கும் ஏரியின் பெயர் பெரிய ஏரி.

பட அட்டைகளை வைத்து மாணவர்கள் கதை கூறுதல்

பட அட்டையைப் பார்த்து எவ்வாறு கதை கூற வேண்டும் என்று செய்து காட்டினேன். இரண்டு முறை செய்தபின், மாணவர்களுக்குக் கொஞ்சம் புரிந்தது. பின்பு, ஒவ்வொருவராக பட அட்டையைப் பார்த்து முழு கதையையும் சொல்லச் சொன்னேன்.  இவ்வாறாக  ஐந்து மாணவர்கள் கதைகளைக் கூறினர்.  ஒவ்வொரு மாணவரும் படத்தைப் பார்த்துத் தன்னுடைய சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்திக் கதை கூறினார்கள். இவ்வாறாக மாணவர்கள் தான் அறிந்த வார்த்தைகளால் கதையைக்  கூறியது சிறப்பு.

பட அட்டைகளை வைத்து மாணவர்கள் கதை கூறுதல் 

மாணவர் -1

“ஒரு ஊர்ல ஒரு வீடு சார். பக்கத்துல ஒரு மரம் சார். அது மேல வந்து மைனா இருக்கு சார். அடுத்து வந்து ஒரு பொண்ணு இருக்கு சார். பேரு வந்து மீனா சார். அந்த மீனா வந்துச்சு சார். மைனா எல்லாம் ஓடிப் போச்சு சார்.”

மாணவர்-2

என் பெயர் வளவன். ஊர்ல வீடு இருந்துச்சு சார். வீடு பக்கத்துல மரம் இருந்துச்சு சார். மரத்துல மைனா இருந்துச்சு சார். பேரு மீனா சார். மைனா இருந்துச்சு சார். மைனா தீனி கேட்டுச்சு சார். அது ஓடிச்சு சார். பறந்து ஓடிச்சு சார்.

மாணவர்-3

மணமேடு ஊர்ல ஒரு கூரை இருந்தது சார். அந்தக் கூரை விட்டுல தான் மீனா இருந்தது சார். அங்க தான் சார் பெரிய ஆலமரம் இருந்தது. திடீர்னு மைனா வந்தது சார், மீனா இல்ல சார் …, மைனா இல்ல சார் உணவு தேடி இருந்தது சார். மீனா இல்ல சார் உணவை வச்சிருந்தது சார். மீனாவ பார்த்தவுடனே மைனா எல்லாம் ஒடிப்போய்ச்சு சார்.

 

ஆசிரியர்: சு.கோகுலா, அ.தொ.ப மணமேடு.

Grade: 
3

Subject: 
EVS

Term: Term 1