Towards a just, equitable, humane and sustainable society

இசையாலான வகுப்பறை


ஆசிரியர்கள் அனைவருக்கும் மொழிப்பாடத்தை நடத்தும் போது பல சுவையான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் மற்ற பாடங்களில் இல்லாத ஒரு சிறப்பு மொழிப்பாடங்களுக்கு உண்டு. எவ்வாறெனில் மொழிப்பாடத்தில் மட்டுமே நாம் நினைக்கிற கருத்தை நினைக்கிற விதத்தில் கூற முடியும். பாடநூலில் இருக்கிற பாடல்கள் மற்றும் செய்யுள் பகுதிகளை உரைநடை வடிவிலே கற்பித்தால் மாணவர்களின் ஆர்வம் குறைவாக இருப்பதோடு கற்றல் திறனும் குறைவாகவே இருக்கும்.  இதனைக் கருத்தில் கொண்டு இந்தப்பாடல்களை இசையோடு பாடலாகக் கற்பிக்கும் போது மாணவர்கள் உற்சாகமடைவதுடன் கற்றல் விரைவாகவும் தவறில்லாமலும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இசையமைத்துப் பாடப்படும் ஒவ்வொரு பாடலும் மாணவர்களின் நெஞ்சில் ஓசை நயத்தின் காரணமாக ஆழப்பதிந்துவிடுகிறது. குழு முயற்சி, பாடும்திறன், நிதானம், பொறுமை, மெட்டெடுத்துப் பாடுதல் எனப் பல திறன்களையும் பாடல்களைப் பாடுவதின் வழியாக மாணவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.  மேலும் இசைப்பாடல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நல்லுறவையும் வலுப்படுத்துகின்றன.

எனது பள்ளிப்பருவம் முதல் இசையின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே எனது கற்பித்தல் முறையிலும் எனது ஆளுமைப்பண்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போது என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளிலும் மகிழ்ச்சியிலும் இசை பெரும்பங்காற்றுகிறது என்பதை உணர்ந்து ஆசிரியர்களிடமும் இசையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்  அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை நிகழ்த்திய பயிற்சிப்பட்டறையைப் பற்றிய எனது அனுபவப் பகிர்வே இந்தக்கட்டுரை.

இசையின் நுட்பங்கள்:

முதலில் புலவர்.பட்டாபிராமன் ஐயா, இசையின் சிறப்புகளை விளக்கினார். அதாவது உலகம் இசையால் நிரம்பியது; அனைத்து மொழிகளிலும் இசை முக்கியத்துவம் உள்ளதாய் பார்க்கப்படுகிறது. அனைத்துப் பறவைகளின் ஓசையும் இசை தான் என்றாலும் சில பறவைகளின் ஓசை தான் நமது மனதிற்கு இனிமையாக இருக்கிறது. அதற்குக்காரணம் தாள ஒழுங்குடன் கூடிய ஓசையை அப்பறவைகள் பெற்றிருக்கின்றன என்றார். இசையை முறையாகத்தான் கற்று கொள்ள வேண்டும் என்பது கிடையாது. தீவிரமாக ஒரு பாடலைக் கவனிப்பதின் மூலமாகவே அப்பாடலை எத்தகைய இசையின் மூலம் பாடலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். நாட்டார்ப் பாடல்களே அனைத்து இசைப்பாடல்களுக்கும் முந்தியவை என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

இசையின் நுட்பங்களும் செயல்பாடுகளும்:

இசையின் நுட்பங்களை விளக்கிய பின்னர்ச் சில நாட்டார்ப் பாடல்களைப்பாடி அப்பாடல்களில் இசையின் தன்மை, செயல்பாடு ஆகியவை எப்படி உள்ளது என விளக்கினார்.

  • பாடலும் இசையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர் பாடுகிற போது தாளம் எப்படி ஒன்றிணைந்து இயங்குகிறது என்று நிகழ்த்திக்காட்டினார்.
  • வில்லுப்பாட்டு என்கிற நாட்டுப்புறப் பாடல் வகைமையில் ஒரு பாடலைப் பாடிக்காட்டி, இதில் எப்படி இசை முக்கியப் பங்காற்றுகிறது என்பதைக் கூறினார் (துள்ளல் இசை).
  • சிலப்பதிகாரம் என்கிற இலக்கியத்தில் இருக்கிற ஒரு பாடல் இசையுடன் பாடப்படும் போது எப்படிச் சிறப்பாக இருக்கிறது, இசை இல்லாமல் படித்தால் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார் (மாசறு பொன்னே வலம்புரி முத்தே பாடல்).
  • ஆறு வகையான நாட்டார் பாடல்களைப்பற்றி விளக்கினார்.
  • முதலில் தாலாட்டுப்பாடலைச் சாதரணமாகப் பாடினார், பின்னர் இசையோடு பாடிக்காட்டினார்.

இசையும் இலக்கண நுட்பங்களும்:

இலக்கணங்களும் அதன் வாய்ப்பாடுகளும் நினைவில் வைத்துக்கொள்வதற்குக் கடினமானவை. எனவே இந்தச் சூத்திரங்களைப் பாடலாகப்பாடினால் எளிமையாக இருக்கும் என்று விளக்கிச் சில எடுத்துக்காட்டுப் பாடல்களைப் பாடிக்காட்டினார்.

  • புணர்ச்சி விதிகள் பற்றிய பாடல்.
  • நன்னூலின் நூற்பாக்கள் தொடர்பான பாடல்.

இசையும் கற்பித்தல் நுட்பங்களும்:

நமது மரபில் இருக்கிற நாட்டார்ப் பாடல்களில் கற்பித்தல் தொடர்புடைய பல கூறுகள் இருக்கின்றன. அத்தகைய நாட்டார் இசைப்பாடல்கள் பலவற்றை எடுத்துக்காட்டி விளக்கினார்.

  • காவடிப்பாடல் ஒன்றினைப் பாடிக்காட்டி, இந்தப்பாடல் ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் பற்றிய அறிமுகத்தையும் அதனை நினைவில் வைத்துக்கொள்வதற்கான பயிற்சியையும் தருகிறது என்று கூறினார்.
  • நாட்டார் விளையாட்டுகளில் ஒன்றான குண்டு விளையாட்டில் பாடப்படும் பாடலில் நுட்பமான முறையில் ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதைப் பாடலாகப்பாடி விளக்கிக்காட்டினார்.

பாடநூல் பாடல்கள்:

ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி முதல் வகுப்பு தமிழ்ப் பாட நூலில் உள்ள காய்கறிகள் பற்றிய பாடலைப் புலவர்.பட்டாபிராமன் பாடிக்காட்டினார். பாடும்போது காய்கறிகளையும் காட்டினார். இரண்டாம் வகுப்பு பாடநூலில் உள்ள சேவல் கூவுது பாடலைப் புது இராகத்தில் பாடிக் காட்டினார். எந்தவொரு பாடலுக்கும் தாளத்தை எப்படி உருவாக்குவது என்று விளக்கினார். எத்தனைச் சொற்கள் பாடலில் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு தாளம் அமைக்க வேண்டும் என்றார். சின்ன சின்ன நாய்க்குட்டி, தோட்டம் நல்ல தோட்டம் போன்ற பாடல்களைப் பாடினார். ஆசிரியர்களும் இணைந்து பாடினர். பின்னர் திருக்குறளை இரண்டு இராகங்களில் பாடிக்காட்டினார். ஆசிரியர்களும் வகுப்பறையில் தாங்கள் இராகத்தோடு பாடிய பாடல்களைப் பாடிக்காட்டினர்.

சிறுவர்களிடம் புழக்கத்தில் இருக்கிற நாட்டார்ப் பாடல்களின் துணையோடும் இசையின் துணையோடும்  ஆசிரியர் வகுப்பறையை உருவாக்கும் போது கற்றல் சுமையாக இல்லாமல் சுகமானதாக இருக்கும் என்பதை இப்பயிற்சிப்பட்டறை அனைத்து ஆசிரியர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

ஆசிரியர் : அந்தோனி அந்த்வான்அ, .தொ.ப, பெரியார் நகர்.

Grade: 
1
2

Subject: 
Tamil

Term: Term 1