Towards a just, equitable, humane and sustainable society

வண்ண வண்ணப் பூக்கள்


நோக்கம்:

படத்தைப் பார்த்து மாணவர்களே ஒரு பாடலை உருவாக்கி வாசித்தல்; இதன் மூலம் எழுத்துக்களை அடையாளம் காணுதல்.

பாடப்புத்தகப் பாடல் அறிமுகம்:

முதலில்  எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனைப் பூக்களைத் தேர்ந்தெடுத்து பேப்பரில் படம்  வரைய வேண்டும். முடிந்தவரை விதவிதமான வண்ணங்களில் குழந்தைகள் அறிந்த பூக்களைத் தேர்ந்தெடுத்தல் நல்லது.  இவற்றை மாணவர்களிடம் கொடுத்து வண்ணம் தீட்ட வேண்டும். வண்ணம் தீட்டிய  படங்களைக் காகித்தத்தட்டில் ஒட்டவேண்டும். அதை மாணவர்களின் உடலில் கட்டி விட வேண்டும்.

டப் டப்  டிப் டிப் விளையாட்டு விளையாடும் முறை:

மாணவர்களை வட்டமாக நிற்க வைக்க வேண்டும். டப் டப்  டிப் டிப் சத்தத்தை  ஓசை நயத்துடனும் நடன அசைவுகளுடனும் பாட வைக்க வேண்டும். அவ்வாறு ஆடிக்கொண்டே வேறு பூவின் பெயரைக் குறிப்பிட்டு ‘எங்கே?’ எனக்கேள்வி எழுப்ப வேண்டும். ‘ரோஜா இங்கு யாரு?’ என வட்டத்தின் நடுவில் இரண்டு அல்லது மூன்று முறை ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கேட்க வேண்டும். ரோஜா மலரைக்கட்டியுள்ள மாணவர் ‘நான்தான் ரோஜா, நான்தான் ரோஜா’ எனப் பாடிக்கொண்டே வர வேண்டும். இப்போது ரோஜா நடுவில் வந்து ‘மல்லிகை இங்கு யாரு?’ என்று தொடரவேண்டும்.

இரண்டாம் நாள்:

முதல்நாள் விளையாடிய விளையாட்டை நினைவு கூர்ந்து, ‘எங்க போறீங்க?’ என்கிற கேள்வியை கேட்கவும். அதற்கு ஏற்றார்போல பதில்சொல்லப் பழக்கவும்.

குழந்தை 1: ரோஜாப்பூவே ரோஜாப்பூவே!  எங்க போறீங்க?

ரோஜா குழந்தையின் பதில்: மல்லிகப்பூ எங்கன்னு பாக்கப் போறேங்க!

பாடப் புத்தகத்திலுள்ள அனைத்து பூக்களையும் மாணவர்கள் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.

மூன்றாம் நாள்:

 5-ஆம் பக்கத்திலுள்ள படத்தைப் பார்த்து, படத்தைப்பற்றி மாணவர்களைப் பேச வைத்தல். மாணவர்கள் படத்தைப்பற்றிச் சொல்கிற கருத்துக்கள்  மூலமாகவும் அவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கொண்டும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும். இந்தப்பாடலும் இதிலுள்ள வார்த்தைகளும் மாணவர்களின் சிந்தனையாலும் அவர்களின் வாய்மொழியாலும் உருவானது ஆகையால் அனைத்து மாணவர்களாலும் எளிதில் இப்பாடலை வாசிக்க முடியும்.

இவர் யார்? ( படத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்க வேண்டும்)
(மாமா, தாத்தா என்கிற வார்த்தைகளை மாணவர்கள் கூறும் படி வினாக்களை  எழுப்பலாம் பின்னர்  அந்த வார்த்தைகளைக் கரும்பலகையில் எழுதிக்கொள்ள வேண்டும்)
இவர் யார்? ( படத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்க வேண்டும்)
(அத்தை , ஆயா, அக்கா என்கிற வார்த்தைகளை மாணவர்கள் கூறும் படி வினாக்களை  எழுப்பலாம். பின்னர்  அந்த வார்த்தைகளைக் கரும்பலகையில் எழுதிக்கொள்ள வேண்டும். இதே போல் செயல்பாட்டை அடுத்தடுத்தப் படங்களுக்கும் செய்ய வேண்டும்)
மாமா என்ன செய்றாங்க? (விசிறி விக்கிறாங்க)
அத்தை என்ன செய்றாங்க? (இட்லி விக்கிறாங்க )

இதே போல் செயல்பாட்டை அடுத்தடுத்தப் படங்களுக்கும் செய்து கீழ்க்கண்ட வகையில் சிறிய வாக்கியங்களை உருவாக்க வேண்டும் .

மாமா விசிறி விக்கிறாங்க

அத்தை பூ    விக்கிறாங்க

அக்கா இட்லி விக்கிறாங்க

ஆயா விளக்கு விக்கிறாங்க

மேற்கண்ட முறையில் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிலை  ஆசிரியர் ஒவ்வொரு சொல்லாக படித்துக் காட்ட வேண்டும், பிறகு அனைத்து மாணவர்களையும் ஒவ்வொருவராக அழைத்து  வாசிக்க வைக்க வேண்டும். வாசித்து முடித்தப் பிறகு  குறிப்பிட்ட வார்த்தைகள் எங்கு உள்ளது என வினவ வேண்டும். அவர்கள் வாசிக்காவிட்டாலும் மனதிற்குள் வைத்து அடையாளப்படுத்துவர். அவ்வாசிப்பை முக்கியமான ஒன்றாக அங்கீகரிக்க வேண்டும்.

நான்காம் நாள்:

படத்தில் இருப்பவைகள் பற்றிக் கேட்கவேண்டும். அதாவது யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி முந்தைய நாள் மாணவர்களிடம்  வினா எழுப்பினோம். இப்பொழுது படத்தில் மனிதர்களைத் தவிர்த்து  எதெல்லாம் இருக்கிறது என்று வினா எழுப்ப வேண்டும்.

மரம் , கிளி, அணில், வீடு…

கிடைத்த பதில்களை எழுதிக்கொண்டு அது தொடர்பான வேறு சில கேள்விகளைக் கேட்க வேண்டும். 

என்ன மரம்? ( ஆலமரம் )
ஆலமரத்துல என்ன தொங்குது?(விழுது)

மரம் மரம் ஆலமரம்

விழுது தொங்குற ஆலமரம்

இந்த இரண்டு வரிகளையும் ஆசிரியர் ஒவ்வொரு சொல்லாகப் படித்துக் காட்ட வேண்டும். இதே போல் கிளி, அணில், வீடு ஆகிய ஒவ்வொன்றிற்கும் மாணவர்களிடமிருந்து வார்த்தைகளைப் பெற்று பாடலை உருவாக்க வேண்டும்.

மரம் மரம் ஆலமரம்

விழுது தொங்கிற ஆலமரம்

கிளி கிளி பச்சக்கிளி

கீ கீ கத்தும் கிளி

அணில் அணில்  அழகு அணில்

ஓடி ஆடும் சின்ன அணில்

வீடு வீடு ஓட்டு வீடு

கம்பி சன்னல் வச்ச வீடு

மேற்கண்ட வடிவிலான  ஒரு பாடல் கிடைக்கும்.  இந்தப்பாடலை ஆசிரியர் இசையோடு  பாடிக்காட்ட வேண்டும். மாணவர்களும் சேர்ந்து பாடுவார்கள். ஆசிரியர் வாசித்த பிறகு அனைத்து மாணவர்களையும் ஒவ்வொருவராக   அழைத்து  வாசிக்க வைக்க வேண்டும். வாசித்து முடித்தப் பிறகு  குறிப்பிட்ட வார்த்தைகள் எங்கு உள்ளது என வினவ வேண்டும்.

ஐந்தாம் நாள் :

மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய பாடலில் உள்ள கதாபாத்திரங்களை ஏற்று படங்களில் உள்ள நிகழ்விற்கேற்ப  நடித்துக்காட்டச் சொல்ல வேண்டும். அப்போது அவர்களின் பாடலையும் பாடிக்கொண்டே நடிப்பார்கள்.

ஆசிரியர்கள்: இராஜேஷ்(அ.தொ,ப,சிவராந்தகம்பேட்); கவிதா(அ.தொ.ப,மணவெளி(அ)), சங்கரதேவி(அ.தொ.ப, அபிஷேகப்பாக்கம்)

               

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1