Towards a just, equitable, humane and sustainable society

மரபு அறிவோம்


பாடச்சுருக்கம்:

நிலப்பகுதிகள் அதில் விளைகிற தாவரங்களின் தன்மைக்கேற்ப தோட்டம், தோப்பு, வயல், கொல்லி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மேலும் தாவரங்களில் விளைகிற காய்களும், கனிகளும் அவற்றின் அமைப்பிற்கேற்ப குலை, கொத்து, கதிர்  எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நம்மைச்சுற்றியுள்ள இத்தகைய பொருள்களை நமது தமிழ் மரபுப்படி எப்படிக் குறிப்பிடுவது என்பதை இப்பாடம் விளக்குகிறது.

நோக்கம்:

தாவரங்கள் விளைகிற நிலங்கள் மற்றும் காய் கனிகளின் மரபுச்சொற்களை மாணவர்களின் மூலமாகச் சொல்ல வைத்துப் பேசவும்  படிக்கவும் வைத்தல்.

அறிமுக உரையாடல்:

மாணவர்களின்  கவனத்தைக் கவரும் வகையிலும் ஆசிரியர் மாணவரிடையே புரிதலுணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கீழ்க்கண்ட மாதிரியிலான  சில வினாக்களை எழுப்பலாம்.

  • உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
  • ஏன் அப்பாவை ‘அப்பா’ என்று குறிப்பிடுகிறீர்கள். அண்ணா அல்லது தம்பி என்று சொல்லக்கூடாதா? (இதேபோல் அம்மாவை வைத்தும் கேள்வி எழுப்பி இந்த வினாக்களுக்கு மாணவர்கள் பலவிதமான விடைகளைக்கூறிய பிறகு, சில சொற்களை மரபு கருதி தனித்தன்மையான பெயர்களில் கூறி வருகிறோம். அப்படியான மரபுப்பெயர்கள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்ளலாமா என்று உரையாடலைத் தொடரலாம்)
  • பூஞ்செடிகள் இருக்கிற இடத்தை எப்படி அழைப்பீர்கள்?
  • மாமரங்கள் நிறைந்த இடத்தை எப்படி அழைப்பீர்கள்?

(மாணவர்கள் தாங்களாகவே தோட்டம் அல்லது தோப்பு என்கிற வார்த்தையைச் சொல்லும் படியான  வினாக்களை எழுப்பலாம்.)

படம் – 1

படத்தை அனைத்து மாணவர்களிடமும் காண்பிக்க வேண்டும். கீழ்க்கண்ட மாதிரியிலான  சில வினாக்களை எழுப்பலாம்.

  • படத்தில் என்ன இருக்கிறது?

(தென்னை மரம், தேங்காய் என்று மாணவர்கள் கூறினால் அந்த வார்த்தைகளைக் கரும்பலகையின் ஓரத்தில் எழுத வேண்டும்)

  • நிறைய தென்னை மரங்கள் இருக்கிற இந்த இடத்தை அல்லது நிலத்தை எப்படி அழைப்பீர்கள்? (தென்னந்தோப்பு)
  • தென்னந்தோப்பு பார்க்க எப்படி இருக்கிறது? (அழகாக இருக்கிறது)
  • ஏன் இதனைத் தோப்பு என்று கூறுகிறீர்கள்?

அழகா இருக்குது தென்னந் தோப்பு

ஒரே மாதிரி மரம் இருக்கற தென்னந்தோப்பு

(இப்போது ஆசிரியர் ‘ஒரே வகையான தாவரங்கள் இருக்கிற நிலப்பகுதியைத் தோப்பு’ என்று கூறலாம் என்பதை விளக்குவார்)

  • வேறு எந்தெந்தத் தாவரங்கள் இருக்கிற நிலப்பகுதியைத் தோப்பு என்று கூறுவோம்?

(மாணவர்கள் கூறுகிற விடைகளை ஆராய்ந்துத் தெளிவுபடுத்த வேண்டும். உ.ம். முந்திரித்தோப்பு, பனந்தோப்பு )

  • தென்னந் தோப்பில் என்ன காய்க்கும்? (தேங்காய்)
  • நிறைய தேங்காய்களை எப்படி அழைப்பீர்கள்? (தென்னங்குலை)
  • தென்னங்குலை  எப்படி இருக்கிறது, நிற்கிறதா அல்லது சாய்ந்திருக்கிறதா அல்லது படுத்திருக்கிறதா? (சாய்ந்து கிடக்குது தென்னங்குலை)
  • ஏன் இதனை குலை என்று கூறுகிறீர்கள்?

(இப்போது ஆசிரியர் ‘ஒரே காம்பில் வரிசையாகப் பல காய்கள் காய்ப்பது குலை’ என்று விளக்கிக்கூறலாம்)

  • வேறு எந்தெந்தத் தாவரங்களில் குலை இருக்கும்? (உ.ம். பனங்குலை, பாக்குக் குலை)

அழகா இருக்குது தென்னந்தோப்பு

ஒரே மாதிரி மரம் இருக்கற தென்னந்தோப்பு

சாய்ந்து கிடக்குது தென்னங் குலை

ஒரே காம்புல இருக்கற தென்னங்குலை

முன்னர் எழுதிய சொற்றொடர்களுடன் குலை பற்றிய விளக்கத்தையும் இணைத்துக் கீழ்க்கண்ட மாதிரியான சொற்றொடர்களை மாணவர்களின் துணையோடு எழுதலாம்.

படம் – 2

படத்தை அனைத்து மாணவர்களிடமும் காண்பிக்க வேண்டும். கீழ்க்கண்ட மாதிரியிலான  சில வினாக்களை எழுப்பலாம்.

  • படத்தில் என்ன இருக்கிறது? (நெல்)
  • நிறைய நெற் செடிகள் இருக்கிற இந்த இடத்தை அல்லது நிலத்தை எப்படி அழைப்பீர்கள்? ( நெல் வயல் )
  • நெல் வயல் பார்க்க எப்படி இருக்கிறது? (பச்சையாக இருக்கிறது)
  • ஏன் இதனை வயல் என்று கூறுகிறீர்கள்?

(இப்போது ஆசிரியர் ‘தாவரங்கள் வளர்வதற்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நிலப்பகுதியை வயல்’ என்று கூறலாம் என்பதை விளக்குவார்)

பச்சையா இருக்குது நெல்வயல்

நிறைய  தண்ணி  தேவைப்படும் நெல்வயல்

  • நெல் வயலில் என்ன விளைந்திருக்கும்? (நெல்)
  • நிறைய நெல்மணிகளை எப்படி அழைப்பீர்கள்? (நெல்கதிர்)
  • நெல்கதிர் எப்படி இருக்கிறது, நிற்கிறதா அல்லது சாய்ந்திருக்கிறதா அல்லது படுத்திருக்கிறதா? (நிமிர்ந்து நிக்குது நெல்கதிர்)
  • ஏன் இதனைக் கதிர் என்று கூறுகிறீர்கள்?

(இப்போது ஆசிரியர் ‘காம்பு நிமிர்ந்து நிற்கிற தன்மை கொண்ட விதைகள் அல்லது காய்கள் கொண்டவைகள் கதிர்’ என்று விளக்கிக்கூறலாம்)

பச்சையா இருக்குது நெல்வயல்

தண்ணி நிறைய  தேவைப்படும் நெல்வயல்

நிமிர்ந்து நிற்குது நெல்கதிர்

நேரா நிக்கர காம்பு இருக்கிற நெல்கதிர்

  • வேறு எந்தெந்தத் தாவரங்களில் கதிர் இருக்கும்? (உ.ம்.கம்மங்கதிர், சோளக்கதிர் )

மேற்கண்ட நான்கு வரிகளையும்  ஆசிரியர் ஒவ்வொரு வார்தையாகச் சுட்டிக்காட்டிப் படிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு மாணவராக அழைத்து இதே போன்று படிக்கச்சொல்ல வேண்டும்.

குழுச்செயல்பாடு: படம் – 3

தோட்டம், தார் என்பவற்றிற்கான விளக்கத்தை அளித்து, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, படத்தைத் கொடுத்து, முன்பு உருவாக்கியது போன்ற வரிகளை எழுதச் சொல்லலாம். மாணவர்கள் எழுதத் தடுமாறும் போது ஆசிரியர்கள் எழுதுவதற்கு உதவி செய்யலாம்.

அழகா இருக்குது வாழைத்தோட்டம்

காவல் தேவையான வாழைத்தோட்டம்

சாய்ந்து கிடக்குது வாழை தாரு

வாழை மரத்தில மட்டும் இருக்கிற வாழை தாரு

இந்தச்செயல்பாட்டின் முடிவில் கீழ்க்கண்ட மாதிரியிலான வாக்கியங்கள் மாணவர்கள் கூறிய சொற்களின் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

விலங்கினம் – மரபுச் சொற்களை கண்டறிதல்:

அழகா இருக்குது தென்னந்தோப்பு

ஒரே மாதிரி மரம் இருக்கற தென்னந்தோப்பு

சாய்ந்து கிடக்குது தென்னங்குலை

ஒரே காம்புல இருக்கற தென்னங்குலை

 

பச்சையா இருக்குது நெல்வயல்

தண்ணி நிறைய  தேவைப்படும் நெல்வயல்

நிமிர்ந்து நிற்குது நெல்கதிர்

நேரா நிக்கர காம்பு இருக்கிற நெல்கதிர்

 

அழகா இருக்குது வாழைத்தோட்டம்

காவல் தேவையான வாழைத்தோட்டம்

சாய்ந்து கிடக்குது வாழைத்தாரு

வாழை மரத்தில மட்டும் இருக்கிற வாழைத்தாரு

 

உயரமா இருக்குது பனந்தோப்பு

ஒரே மாதிரி மரம் இருக்கிற பனந்தோப்பு

நிறைய தொங்குது பனங்குலை

ஒரே காம்புல இருக்கிற பனங்குலை

 

புதாரா இருக்குது கொய்யாத்தோப்பு

ஒரே மாதிரி மரம் இருக்கிற கொய்யாத்தோப்பு

பழுத்து தொங்குது கொய்யாகொத்து

காம்புல பிரிஞ்சி தொங்குது கொய்யாகொத்து

 

விளைஞ்சி இருக்குது கம்மங்கொல்ல

தண்ணி இல்லாத இருக்கற கம்மங்கொல்ல

நீட்டா நிக்குது கம்மங்கதிரு

நேரா நிக்கர காம்பு இருக்கிற கம்மங்கதிரு

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிடமும் விலங்கினங்களின் தொகுதிகளுடைய படங்களைக் கொடுத்து மேற்கண்ட முறையில் வினாக்களை எழுப்பி விலங்கினத் தொகுதிகளுக்கான மரபுப்பெயரையும் அவற்றைப் பற்றிய விளக்கத்தையும் மாணவர்களின் கருத்துக்களின் வழியாகவே எழுத வேண்டும். உதாரணமாக ஆட்டு மந்தை, மான்கூட்டம், ஆநிரை அல்லது பசுநிரை.

பாடப்புத்தகத்தோடு தொடர்பு படுத்துதல்:

மேற்கண்ட செயல்பாடுகளின் மூலமாகவும் மாணவர்களுக்குப் பாடச்சுருக்கமும் பல புதிய வார்த்தைகளும் பரிச்சயமாகியிருக்கும். இந்நிலையில் பாடப்புத்தகத்திலுள்ள புதிய சொற்களை ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது மாணவர்களால் பாடத்தைச் சோர்வின்றி எளிமையாகப் படிக்க முடியும்.

ஆசிரியர்கள்: சபரிநாதன்.S (அ.தொ.ப, அரங்கனூர்) சுகுணா.J (அ.தொ.ப, பங்கூர்)

Grade: 
4

Term: Term 1

Subject: 
EVS