Towards a just, equitable, humane and sustainable society

படைப்போம்! படிப்போம்!!


பாரதிதாசனின் "பெண்கல்வி" என்ற பாடலுக்கு நிகரான வரிகளை மாணவர்களே உருவாக்கி வகுப்பில் உள்ள அணைத்து மாணவர்களும் வாசித்து மகிழும் ஒரு புதிய அணுகுமுறை 

இன்றைய சூழலில் தமிழ் வகுப்பறை:

தமிழ் வகுப்பறையில் நாம் அதிகமாக எதிர்நோக்கும் சிக்கல் என்றால் அது ‘பெரும்பாலான மாணவர்களால் தாய்மொழியை வாசிக்க இயலவில்லை’ என்பது தான். ஒவ்வொரு ஆசிரியரும் இந்நிலையைக் கலைய எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமது எண்ணங்களை வாய்வழி வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தைகள், எழுத்து வழி வெளிப்படுத்தவும் எழுத்துக்களை வாசிக்கவும் பயம் கொள்வதேன்? தமிழ்ப் புத்தகத்தில் உள்ள பாடல்கள், கதைகள், பாடங்கள் போன்றவற்றில் கையாளப்பட்ட வார்த்தைகள் (சிலவற்றைத் தவிர) அவர்கள் அறிந்தவைகள் தாமே! பிறகேன் எழுத்துக்கள் என்றாலே ஒருவித பயம், மிரட்சி? பொதுவாகக் குழந்தைகள் அவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துவர். ஒருவேளை அவர்களே உருவாக்கிய படைப்புகளாக இருந்தால், அவற்றை வாசிக்கும் பொறுப்பை அவர்களே ஏற்பரோ? நமது ஐயங்களுக்கு விடைதேட எங்களுக்கு ஒரு புதிய அணுகுமுறை கிடைத்தது. அந்த முறையில் ‘பெண்கல்வி’ என்ற ஐந்தாம் வகுப்புப் பாடலைத் திட்டமிட்டு வகுப்பறையில் செயல்படுத்திப் பார்த்தோம். வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் அவர்கள் உருவாக்கிய பாடலை வாசித்தனர். அந்த அனுபவத்தை இவ்விதழ் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பாடலின் மையக்கருத்து:

பாரதிதாசன் எழுதிய ‘தலைவாரிப் பூச்சூடி’ என்ற பாடலை அறிமுகப் படுத்த, முன்னுரையாக ஒரு கதையை உருவாக்கினோம். “ஒரு ஊர்ல ஒரு பொண்ணு. அந்த பொண்ணு பேரு வெண்ணிலா. அந்தப் பொண்ணு பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்றாங்க. அப்ப அவளோட அம்மா படிப்பு தான் நமக்கு முக்கியம்ன்னு ஒரு பாட்டு மூலமா புரிய வைக்கிறாங்க. அவங்க என்ன சொன்னாங்கன்னு பார்ப்போமா?”

இந்த அணுகுமுறையின் செயல்முறை:

 • ஆசிரியர் பாடத்திற்கேற்ற தெளிவான வண்ணப்படத்தைக் காண்பித்தல்
 • மாணவர்களிடமிருந்து பாடத்திலுள்ள கதையை/ பாடலை வரவழைக்க ஏற்ற வினாக்களைக் கேட்டல்
 • ஆசிரியர், தேவைப்படும் இடங்களில் குறிப்புகள், உதாரணங்கள் போன்றவற்றை அளிக்கலாம்; ஆனால் ஒருபோதும் பதிலை நேரடியாகவோ மறைமுகமாகவோ அளிக்கக் கூடாது
 • மாணவர்கள் பல வார்த்தைகளைக் கூறினாலும், பாடத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தைக்கு இணையான (நாம் எதிர்பார்த்த) வார்த்தை கிடைத்தவுடன், அந்த வார்த்தையை வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • இவ்வாறு உறுதி செய்யப்பட்ட வார்த்தையை, ஆசிரியர் கரும்பலகையின் இடது பக்கத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாகச் சொல்லிக் கொண்டே எழுதவேண்டும்
 • எதிர்பார்த்த வார்த்தைகள் அனைத்தும் கிடைத்த பின், வினாக்களை எழுப்பி, அவற்றைக் கொண்டு வாக்கியங்களை அமைக்கச் சொல்லலாம்.
 • மாணவர்கள் அமைக்கும் வாக்கியங்களை ஆசிரியர் சொல்லிக்கொண்டே கரும்பலகையில் எழுத வேண்டும்
 • இந்த வரிகளுக்கு ஆசிரியர் மெட்டுப் போட்டு ராகத்தோடு பாட, மாணவர்களும் ஆசிரியரோடு இணைந்து கொள்வர்
 • ஓரிரு முறை பாடியபின் ஆசிரியர் மெதுவாக வாசிக்க மாணவர்களும் அவரைப் பின் தொடர்வர்.
 • பின் மாணவர் ஒவ்வொருவரும் முழு வரிகளையும் வாசித்து, ஒவ்வொரு வார்த்தைகளையும் அடையாளம் காண்பர்

முதலாம் நாள் படம் 1:

இந்தப் படத்தைக் (வண்ணப்படம்) காட்டிக் கீழ்வருமாறு கலந்துரையாடினோம்.

 • இந்தப் படத்துல நீ என்ன பார்க்கிற?

அம்மா பொண்ணுக்குத் தலை சீவி பூ வைக்கிறாங்க. (தலைவாரி, பூச்சூடி போன்ற வார்த்தைகளை (முடிந்தால்) வரவழைக்கலாம்)

 • அம்மாவ வேற எப்படிக் கூப்பிடலாம்?

தாய், ஆத்தா… (அன்னை என்கிற பதில் வரும் வரை வினாக்களைத் தொடரவும். கொன்றைவேந்தன் பாடல் வரிகளை இதற்கு நினைவு கூறலாம்)

 • யூனிஃபார்ம் போட்டுகிட்டு அந்த பொண்ணு எங்க போறா?

ஸ்கூலுக்கு, பள்ளிக்கு… (பாடசாலை என்கிற பதில் வரும் வரை வினாக்களைத் தொடரவும். சிறைச்சாலை, புத்தகசாலை போன்ற வார்த்தைகளை உதாரணமாகத் தரலாம்)

இப்போது பாடபுத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடலுக்கு நிகரான பாடலை உருவாக்கத் தேவையான வார்த்தைகள் கிடைத்து விட்டன. ஒவ்வொரு கேள்விக்குப் பிறகு மாணவர்களிடமிருந்து கிடைக்கும் வார்த்தைகளைக் கரும்பலகையின் ஒரு ஓரத்தில் எழுதிக் கொண்டே வரவேண்டும். இந்த நிலையில் கரும்பலகையில் இருக்கும் வார்த்தைகள் – அன்னை, தலைவாரி, பூச்சூடி, பாடசாலை. இவற்றைக் கொண்டு பாடலின் முதல் இரண்டு வரிகளை மாணவர்களிடமிருந்து வரவழைக்க வேண்டும்.

 • “இப்போ வெண்ணிலா நம்ம முன்னாடி நிக்கிறா. அவளைப் பாத்து, அவளோட அம்மா என்ன சொன்னாங்கன்னு பாடப்போறோம். அம்மா என்ன செஞ்சாங்க?” தலைவாரிப் பூச்சூடினாங்க
 • என்ன சொன்னாங்க? பாடசாலைக்குப் போன்னு
 • யாரைச் சொன்னாங்க? வெண்ணிலாவை
 • இப்போ நாம்ம தான் வெண்ணிலா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கோம். பேர் சொல்லாம எப்படிச் சொல்லுவோம்? உன்னை
 • யார் சொன்னது? அன்னை

அனைத்து வார்த்தைகளையும் கரும்பலகையில் ஒரு பாடல் வரிபோன்று எழுதினோம்.

“தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப்

போன்னு சொன்னாங்க உன் அன்னை”

பாடலாகப் பாடுதல் மற்றும் வாசித்தல்:

இந்த வரிகளை எழுதியபின் பாடலாகப் பாடவேண்டும். ஓரிரு முறை மாணவர்களும் நம்முடன் சேர்ந்து பாடவேண்டும். அவ்வாறு பாடும் போது நாம் வார்த்தைகளின் கீழ் கைவைத்துக் கொண்டே வரவேண்டும். இதன் வழியாக மாணவர்கள் கேட்கும் சத்தத்திற்கும் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை அறிவர்.  இவ்வாறு பாடலைப் பாடியபின் ஒவ்வொரு வார்த்தையாக (வார்த்தைகளின் கீழ் கைவைத்துக் கொண்டே) வாசிக்க வேண்டும்.

இப்போது மாணவர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. “மிஸ் நான் படிக்கிறேன், நான் படிக்கிறேன்” என்று அனைவரும் துள்ளினர். ஒவ்வொருவராக வந்து, வார்த்தைகளின் கீழ் கைவைத்து வாசித்தனர். அந்த வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் வாசித்து முடித்தனர் ஒரு மாணவியைத் தவிர. இறுதியில் அந்த மாணவியும் வாசித்தது சிறப்பு.

ஒரு சார்ட் தாளில் படத்தை ஒட்டி, பாடல் வரிகளை எழுதி வகுப்பறைச் சுவரில் ஒட்டினோம். இது வகுப்பறையிலேயே இருப்பதால், மாணவர்கள் ஓய்வுநேரங்களிலும் வாசித்துக் கொள்ளலாம்.

இதுபோலவே அடுத்தடுத்த வரிகளுக்குரிய படங்களைக் காட்டி மாணவர்களுடன் உரையாடி, வார்த்தைகளை வரவழைத்து, கரும்பலகையில் முக்கிய வார்த்தைகளையும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் வரிகளையும் எழுதி, அதைச் சிலமுறை ராகத்தோடு பாடி, வார்த்தைகளைக் காட்டி வாசித்துப் பின் மாணவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து வாசிக்கச் செய்தோம்.

இரண்டாம் நாள்: படம் 2:

 • இந்த பொண்ணு எப்படி நிக்கிறா? (சிலை போல)
 • அழுவும் போது என்ன வரும்? (கண்ணீர்)
 • கண்ணுல இருந்து தண்ணி வருது என்பதை வேற எப்படிச் சொல்லலாம்? (சிந்துது)

“சிலைபோல ஏன் இங்கு நிற்கிறாய்?

நீ கண்ணீரை ஏன் இப்படிச் சிந்துகிறாய்?”

 படம் 3:

 • இந்தப் படத்துல என்ன பாக்குறீங்க? பணம் கொடுத்து வாங்குறத என்னன்னு சொல்வோம்? (விலை)
 • இந்தப் பொண்ணு படிக்கிற மாதிரி இருக்கிற படத்துக்கு ஏன் விலை போடலை? (கல்விய வில கொடுத்து வாங்க முடியாது)
 • அப்ப என்ன செய்யனும்? (கத்துக்கனும்)
 • எப்பல்லாம் கத்துக்கனும்? (தினந்தோறும்)

“விலை கொடுத்து வாங்க முடியாது – கல்வி

தினந்தோறும் கத்துகிட்ட கிடைக்கும் பாரு”

படம் 4:

 • இந்தப் படத்துல என்னென்ன இருக்கு?
 • இதெல்லாம் அவங்களுக்கு எப்படித் தெரியும்? (கத்துகிட்டாங்க)
 • ஒரு வேலையைக் கத்துகிட்ட பிறகு அதைச் சரியா/ கரெக்ட்டா செஞ்சா நமக்கு எப்படி இருக்கும்? (சந்தோஷமா)
 • இது என்ன படம்? (வாழைப்பழம்)
 • என்னென்ன வகைகள் இருக்கு? (மலைவாழை)
 • மலைவாழை போல இனிப்பா இருக்கிறது எதுன்னு சொல்றாங்க? (கல்வி)
 • வயிறு நிறையச் சாப்பிட்டேன் என்பதை வயிறார என்று சொல்றோம். வாய் திகட்டற அளவு சாப்பிடுறதை என்னன்னு சொல்லுவோம்? (வாயார)
 • யார் கிட்ட சொல்றாங்க? (என் புதல்வி)

“மலைவாழை போல் இனிக்கும் கல்வி

வாயார போய் உண்ணு என் புதல்வி”

 • நாம ஸ்கூலுக்கு போகாம இருந்தா நம்மல என்னன்னு சொல்லுவாங்க? (படிக்காத பொண்ணு)
 • பொண்ணு படிக்கலேன்னா, பொண்ணோட அம்மாவ என்ன சொல்லுவாங்க? (கெட்ட அம்மா)
 • ‘கெட்ட அம்மா, கெட்ட அம்மா’ன்னு சொல்லி என்ன பண்ணுவாங்க? (கேலி பண்ணுவாங்க)
 • யாரு? (ஊரார்)

“படிக்காத பெண்ணாய் இருந்தால் – கேலி

பண்ணுவார் என்னை இந்த ஊரார்”

மூன்றாம் நாள்: படம் 5:

 • இந்தப் படம் மூலம் என்ன தெரிஞ்சிகிறீங்க? இவங்க எல்லாரும் எதுக்காக ஓடுறாங்க? (பழசில இருந்து புதுசுக்கு)
 • இதுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்? (படிச்சாதான் பல புதிய விஷயங்கள தெரிஞ்சிக்கலாம்)
 • கடிகாரத்துல இருக்கிற முள் என்ன செய்யும்? (நிற்காமல் ஓடும்)
 • அது போல நாமும் என்ன செய்யனும்ன்னு சொல்றாங்க? (படிச்சிகிட்டே இருக்கனும்)
 • வீட்டுகிட்டேயிருந்து யாரு கூட ஸ்கூலுக்கு வருவீங்க? (அண்டை வீட்டுப் பெண்களோடு)
 • அம்மா உங்கள என்ன சொல்லி கொஞ்சுவாங்க? (என் கண்ணல்ல)

“கடிகாரம் ஓடும் முன் ஓடு – என் கண்ணல்ல

அண்டை வீட்டுப் பெண்களோடு”

 • இது மாதிரி எல்லாத்தையும் கத்துகிறது ஈசியா இருக்குமா? (கஷ்டமா/ கடினமாய் இருக்கும்)
 • ஒருசில வேலைய நாம ஈசியா செய்வோமே, அது எப்போ? (நல்லா கத்துக்கிட்ட பிறகு)
 • அப்போ கல்வி? (கத்துக்க கத்துக்க ஈசியா ஆயிடும்)
 • கத்துகிட்ட பிறகு கல்விய பத்தி நமக்கு என்ன தெரியும்? (அதோட அருமை தெரியும்)

“கடினமாய் இருக்கும் இப்போது – கல்வி

கத்துகிட்டா அதன் அருமை தெரியும் அப்போது”

படம் 6:

 • இது என்ன படம்? (தமிழ்நாடு)
 • தமிழ் நாட்ட சுத்தி மூனு பக்கமும் என்ன இருக்கு? (கடல்)
 • அப்போ இது என்ன தமிழ்நாடு? (கடல் சூழ்ந்த தமிழ்நாடு)
 • பெண்கள் எல்லாம் என்ன பண்றாங்க? (படிச்சிக் கத்துகிறாங்க)
 • ஏன் அவங்க எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ள இருக்காங்க? (தமிழ் நாட்டுல இருக்கிற எல்லாரும் பெண்கள படிக்க சொல்றாங்க)
 • எப்படி சொல்லியிருப்பாங்க, அடிச்சி, உதச்சி, திட்டியா? (அன்பா)

“கடல் சூழ்ந்த இந்த தமிழ்நாடு – பெண்கல்வி

கத்துக்கணும் என்று சொல்லுது அன்போடு”

ஒன்று அல்லது இரண்டு சார்ட்டுகளில் 6 படங்களையும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடல் வரிகளையும் எழுதி வகுப்பறைச்சுவரில் ஒட்டிவிட வேண்டும்.

நான்காம் நாள் – நாடகமாக நடித்தல்:

அவர்கள் உருவாக்கிய பாடலைப் பாடி வாசித்தப் பின் அதை நாடகமாக நடிக்கலாம். மாணவர்கள் ஒவ்வொருவரும் அம்மா, பெண், தோழிகள், கேலி பேசும் ஊரார், வீடு, பள்ளி, வாழைமரம், கடிகாரம் என்ற பாத்திரங்களை எடுத்து வசனங்களை உருவாக்கி, தக்க உடல் அசைவுகளோடும் முகபாவங்களோடும் குரல் ஏற்றத்தாழ்வுகளோடும் பாடலைப் பாடி மகிழலாம். இது அவர்களின் புரிதலை ஆழமாக்கும்.

ஆசிரியர் அனுபவம்:

அவள் மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவள். மற்ற மாணவர்கள் அனைவரும் மட்டுமல்லாது அவளும் தனக்குத் தமிழில் பேசவோ வாசிக்கவோ தெரியாது என்றாள். அவளை அழைத்து, “உனக்குக் தெரிந்த வார்த்தைகளை மட்டும் படி, போதும்.” என்றோம். அவள் முதல் வரியை முழுவதுமாகப் பாடினாள். இரண்டாவது வரி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் சேர்ந்து இரண்டு முறை பாடினோம். இப்போது அவளால் இரண்டு வரிகளையும் பாட முடிந்ததோடு ஒவ்வொரு வார்த்தையையும் அடையாளம் காணவும் முடிந்தது.  “என்னால் படிக்கவே முடியாது” என்ற ஒரு பெண்குழந்தை இறுதியில் “என்னால் தமிழைப் படிக்க முடிகிறது” என்று கூறியபோது எதையோ சாதித்த உணர்வு.

 • இதுமட்டுமின்றி மாணவர்களால் ஒவ்வொரு வார்த்தையையும் அடையாளம் காண முடிந்தது என்பது அடுத்த நிலை பெருமிதம்.
 • முதல் படத்திற்கு எடுத்த நேரத்தை விட இரண்டாவது படத்திற்குக் குறைவான நேரமே எடுத்தது. மாணவர்களுக்கு இந்த அணுகுமுறை சற்று பிடிபடத் தொடங்கியுள்ளது என்று கருதுகிறேன்.  இதுபோல் அடுத்தடுத்த படங்களுக்கான நேரமும் குறையவே செய்தது.
 • அனைத்து மாணவர்களும் பேசத்தொடங்கினர். எந்த வார்த்தையும் ‘தவறு’ என்று ஆசிரியர் தீர்மானிக்கவில்லை. அவர்களுக்குள்ளேயே கலந்து பேசி ஒரு வார்த்தையைச் தேர்வு செய்வது, அவர்கள் உருவாக்கிய வரிகளை அவர்களே பாடி வாசிப்பது, பாடப்பொருளை முழுமையாக புரிந்து கொள்வது போன்ற செயல்கள், அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
 • இந்த அணுகுமுறை அரசுப் பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்குப் பொருத்தமாக இருப்பதாகவே எண்ணுகிறோம்.

மேலே விவரித்த அணுகுமுறையைக் கையாண்டபோது, அனைத்து மாணவர்களும் பாடலின் பொருளை அறிந்திருந்தனர், வாசித்தனர். இவைமட்டுமன்றி, அனைவரும் உரையாடலில் பங்கேற்றனர் என்பது சிறப்பு. இனி நம் வகுப்பறையில் தமிழை வாசிக்க முடியாத மாணவரும் இருப்பரோ! தமிழில் தமது படைப்புகளை உருவாக்க முடியாதோரும் இருப்பரோ!!

குறிப்பு: இந்த அணுகுமுறையில் உருவாக்கப்பட்ட 1, 3 மற்றும் 4ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில்.

ஆசிரியர்கள்:

பத்மினி, அ.தொ.ப., தட்டஞ்சாவடி (வட்டம் 1)

ஷாலினி, சவரிராயலு அ.தொ.ப.

Grade: 
5

Term: Term 1

Subject: 
Tamil